வெள்ளி, 11 ஜூலை, 2008

இருக்குவேதத் தெய்வங்கள் ஆரியத் தெய்வங்களா?- பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

இருக்கு வேதம் ஆரியரது வேதமா?

இந்தகு கேள்வியே பலருக்கு வியப்பாகத் தோன்றக்கூடும். ஆனால் வியப்பாகத் தோன்றக் கூடிய கேள்விகள் எல்லாமே எப்போதும் வியப்பாகத் தோன்றவேண்டும் என்பதில்லை. மரத்திலிருந்து பழம் ஏன் கீழே விழுகிறது. ஏன் மேலே போகவில்லை? என்று நியூட்டன் கேட்ட கேள்வி இன்றுகூடப் பெரும்பாலோருக்கு வியப்புக்குரிய அசட்டுக் கேள்வியாகத்தான் தோன்றும்; ஆயினும் இன்று இயல்நூலறிஞர் நிலாவுலகுக்குப் பயணம் செல்லும் நிலைக்கு வழி வகுத்தது அந்தக் கேள்வியால் பிற்பட்ட அறிவு வளமேயாகும்.

இருக்குவேதம் பண்டைய இந்தியாவின் நான்கு வேதங்களில் ஒன்று, அதுமட்டு மன்று, நான்கிலும் பழமையான வேதம். முதல்வேதம் அதுதான்; அதன் பதிகங்களில் சிலவற்றை எடுத்தும் சிலவற்றைச் சேர்த்தும் தான் மற்ற வேதங்கள் பிற்காலத்தில் ஆக்கப்பட்டன. அது மட்டுமன்று; வேதங்கள் நான்காகுமுன் மூன்றாக இருந்த காலமும் உண்டு. இந்து சமய ஆரியரைப் பார்த்துத் தாமும் வேதம் ஆக்கிக் கொண்ட புத்த சமய ஆரியர் காலத்தில் மூன்று வேதமே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வகுத்துக் கொண்ட வேதங்கள் அதாவது பிடகங்கள் மூன்றே.

இன்றுகூட வட நாட்டுப்பிராமணர்கள் மூன்று வேதங்களைத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். திரிவேதி' என்ற ஆட்பெயர்கள், இடப் பெயர்கள் இன்றும் இதற்குச் சான்றுகள், தென்னாட்டுப் பிராமணர்கள்தான் நான்கு வேதங்களை ஏற்கிறார்கள் இந்த நால்வேத மரபை இந்திய ஆரியர் தமிழகத்திற்கு வந்த பிற்பாடு தமிழ் மரபைப் பார்த்துத்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் தென்னாட்டவர்க்கு வேதங்கள் நான்கு என்ற மரபு புதிதன்று; ஏனெனில், நால்அல்வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு நெடிது சேண் விளக்கி நடுக்கின்றி நிவியரோ! - என்று பழம் புறநானூற்றுப் பாடல் பாண்டியனை வாழ்த்துகிறது. சங்க காலத்திலிருந்தே நாம் தமிழ்நாட்டிதல் தமிழரசர்களால் சதுர்வேதி மங்கலங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம், இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென்னகத்தில் நால்வேத மரபு இருந்து வந்துள்ளது.

தமிழர் நால்வேதம் எது என்பது நாம் இங்கே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு அன்று. இருக்கு வேதம் ஆரியரது வேதமா? என்பது மட்டும் தான் இங்கே ஆராயப்பட வேண்டியது ஆகும். அதையே தொடருவோம்.

இந்தியாவின் நால் வேதத்தில் முதல் வேதம் இருக்கு என்று இன்று பெயர் பெற்று வழங்குகிறது. ஆனால் இந்தப் பெயரைபழமை வாய்ந்த மூலப் பெயர் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் சமஸ்கிருத மொழியில் ரிக் என்றால் மந்திரம் என்று தான் பொருள். வேதம் முன்றாக அல்லது நான்காக ஆன போது, இப்பெயர் இதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு ஆரியர் வருமுன் அவர்கள் தங்கிய ஈரான் (பாரசீக) நாட்டில் இருந்த ஈரான் ஆரியர் கிட்டத்தட்ட இருக்கு வேதமே என்று கூறத்தக்க ஒரு வேதத்தை இன்றும் பின்பற்றுகிறார்கள். அது நாலு வேதமோ மூன்று வேதமோகூட அன்று: ஒரு வேதமே; அதன் பெயர் இருக்கு அன்று, அவெஸ்தா என்பதே.

வேதம், அவெஸ்தா ஆகிய இரு பெயர்களும் ஒரே சொல்தான். இரண்டுக்கும் இரு மொழிகளிலும் அறிவு என்பதுதான் பொருள். அறிவுத்திறம் சொல்திறம் என்ற பொருளுடைய விட் என்ற ஆங்கிலச் சொல்லும், அறி என்ற பொருளுடைய வித் என்ற இலத்தீன வேர்ச்சொல்லும் இவற்றின் தொடர்புடையவையே.

இருக்கு வேதத்தில் பல இந்தியத் தெய்வங்கள், இந்திய ஆறுகள், நிலங்கள், இந்திய மரஞ்செடி கொடிகள் இந்திய நாகரிகப் பண்பாட்டுக் கருத்துக்கள் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் உள்ளன. இவற்றுள் சிலவே இந்திய வேதம் ஈரான் அவெஸ்தா ஆகியவற்றுக்குப் பொது பல இந்திய வேதத்தில் இடம்பெறவில்லை. இவை ஆரியர் இந்தியாவுக்கு வந்தபின், அதற்கேற்பச் சேர்க்கப்பட்டவை அல்லது மாற்றப்பட்டவை என்பது தெளிவு.

இந்திய வேதத்திற்கும் ஈரான் வேதத்திற்கும் பொதுவான பல தெய்வப் பெயர்கள், சமயவினைகள், பண்பாட்டுக் கருத்துக்களின் பெயர்கள் உண்டு. இவற்றையே பல மேலையறிஞர் பழமையான மூல ஆரியச் சின்னங்கள் என்று கூறுவர். ஆனால் கூட ஆரியச்சின்னங்கள் தான் என்று கூற முடியாது; கூறுவது தவறு.

இரண்டு வேதங்களிலும் தேவர் அசுரர் (பார்சிஅஹூரா வேள்வி (சமஸ்கிருதம், யஜ்ஞபார்சி, யஸ்ன) அக்கினி, இந்திரன், வருணன் போன்ற பெயர்கள் உண்டு. ஆனாலும் இப்பெயர்கள் வகையில் இரு ஆரியக் கிளைகளுக்கிடையிலும் பொருளிலும், பண்பிலும் நேர் எதிர்மறையான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்திய ஆரியருக்குத் தேவர்கள் வணக்கத்துக்குரிய நல்ல தெய்வங்கள். அசுரர்களோ தேவர்களுக்கு எதிரிகளான பகைத் தெய்வங்கள் ஆனால் ஈரானிய ஆரியராகிய பார்சிகளுக்கும் அவர்கள் மரபில் வந்த பாரசிக இஸ்லாமியருக்கும் அசுர (அஹுர) என்பதே கடவுளையும் வணக்கத்துக்குரிய தெய்வங்களையும் குறிக்கும்.

இந்திய ஆரியருக்கு யாகம் என்பது ஆடு கொல் வேள்வி (அஜமேத யாகம்) பசுக் கொல் வேள்வி (கோமேத யாகம்) குதிரை கொல்வேள்வி (அசுவ மேத யாகம்) போன்ற கொலை வேள்விகளைக் குறிக்கும். ஈரானிய ஆரியர்க்கும் அவர்கள் மரபினரான இன்றைய இந்திய பார்சிகளுக்கும் யாகம் என்பது தீவழிபாடு, கதிரவன் வழிபாடு; அவ்வளவே!

ஈரான் என்ற பாரசீக நாடும் நடு ஆசியாவில் இருந்து இந்து கோகமலைப் பகுதியில் ஆரியா என்று அழைக்கப்படும் ஆரிய நாடும்தான் ஆரியரும் திராவிடரும் முதல் முதல் கைகலந்து ஆரிய திராவிடப் போராட்டம் நடத்திய இடங்களாகும், ஆரியர் தமக்கு ஆரியர் என்ற இனப் பெயரைப் பெருமையுடன் சூட்டிக் கொண்டதும், தமக்கென ஒரு வேதத்தை ஆக்கிக் கொண்டதும் இங்கேதான். ஏனெனில் ஈரானிய ஆரியருக்கும் இந்திய ஆரியருக்கும் மட்டும்தான் வேதம் உண்டு. உலகெங்கும் உள்ள மேலை ஆரியருக்கு இவை கிடையாது தமக்கெனப் புரோகிதர் கோயில் இல்லாத ஆரியஇனம் திராவிடர் போன்ற ஆரியரல்லாத பழைய இனங்களுக்குரிய புரோகிதரைப் பெற்ற பிராமணர்களின் தலைமை ஏற்றது கூட இந்த ஆரிய நாட்டிலேயே அன்று கருத இடமுண்டு.

வேதம் அவெஸ்தா ஆகியவை காட்டும் இரு கிளை வேறுபாடு ஆரிய திராவிடக் கலப்புக்குப் பின்னும் நிகழ்ந்த ஒரு பெரிய ஆரிய திராவிட நாகரிகப் போராட்டத்தின் படிமானமாகவே நமக்குக் காட்சியளிக்கின்றன. ஆனால் வியத்தகு செய்தி என்னவென்றால் ஆரிய-பாரசி நாடுகளில் திராவிடப் பண்பாடாக மேலோங்கிற்று. திராவிடப் பண்பாட்டை ஏற்கமுடியாமல், அதன் ஆதிக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களே இந்திய ஆரியர்கள். பாரசிக வேத மரபுடன் அவர்கள் அதற்கு முரணான ஆரியப் பண்புகளைக் கலந்த ஆரியத்திரிபற்ற புதிய வேதமே இருக்கு வேதம் ஆகும். அது முதலில் அவெஸ்தாவைப் போலவே வேதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு, இந்தியாவில் மூன்று வேதம், நான்கு வேதமாகப் புதுப்பிக்கப்பட்ட சமயத்திலேயே இருக்கு என்ற புதிய பெயரையும் பெற்றது.

தேவர், அசுரர், யாகம் என்ற பெயர்கள் மட்டுமன்றித் தேவர்களைக் காட்டிய அருணன் இந்திரன், அக்கினி என்ற தெய்வப் பெயர்கள்கூட ஈரானுக்கும் இந்தியாவுக்கும் வெளியே எந்த ஆரிய இனத்தவர்க்கும் கிடையாது. இந்தத் தெய்வங்கள் அனைவரும் தெய்வப் பெயர்களையும் கூடத் திராவிடரிடமிருந்தோ, ஆரியரல்லாத வேறு பழங்குடியினரிடமிருந்தோ தான் ஆரியர் பெற்றிருக்க வேண்டும். வட ஐரோப்பிய ஆரியரிடையே பண்டைய (ஜெர்மானியரிடையே) தார் (இடித்தெய்வம்) வோடன் (மின்னல் தெய்வம்), பிரியா (விதி நங்கை) போன்ற தெய்வங்களின் பெயர்களும் பண்புகளும் இருக்கு வேதத் தெய்வங்களுடன் ஒரு சிறிதும் தொடர்புடையவையாகக் காணப்படவில்லை.

இருக்கு வேதத் தெய்வங்களிடையே மிகமிகப் பழமையான தெய்வம் வருணன்தான். பிற்கால மாகிய புராண காலத்திலும் இக்காலத்திலும் அவன் கடல் தெய்வம். ஆனால் இருக்கு வேத காலத்தில் அவனேவான் மழைத்தெய்வம் அவன் இருக்கு வேதத்திலேயே அசுரன் என்றும் அழைக்கப்படுகிறான்.

வருணனோடு பெயரொற்றுமையுடைய கிரேக்கா ரோமத் தெய்வம் யூரான்ஸ், அவன் அங்கு வான்மழைத் தெய்வமாகத்தான் கருதப்படுகிறான். அது மட்டுமன்று புதிதாக வந்த தேவர்களுக்கும் அவர்கள் அரசனாகிய ஜியூஸ் அல்லது ஜோவ் அல்லது ஜூப் பிட்டருக்கும் முற்பட்ட அசுரர்கள் (டிட்டான்ஸ்) குழுவின் அரசனாகவே அவன் அம்மரபில் குறிக்கப்படுகிறான்.

தொல்காப்பியமரபின் நெய்தல் நிலத் தெய்வமான வருணனை இருக்குவேத ஆரியர் தம் தெய்வமாக்கிக் கொண்டதற்கு இது இரட்டைச் சான்று ஆகும். அத்துடன் ஏற்றுக் கொண்டபின் அவன் தொல்காப்பிய மரபு பின்பற்றியே கடல் தெய்வம் ஆனான்.

அக்கினி என்ற சொல் தீ என்ற பொருளில் கிரேக்க இலத்தீன் மொழிகளில் உண்டு ஆனால் ஈரான் இந்தியப் பரப்பில் மட்டுமே அக்கினி ஒரு தெய்வம். இத்தெய்வமும் திராவிடத் தெய்வமே என்று கொள்ள இடமுண்டு.
ஏனெனில் கதிரவன் வணக்கம் இன்றும் பார்சிகளுக்குத்தான் தனிச் சிறப்பு பண்டை ஈரானியரிடமிருந்து கிரேக்க உரோமர்கள் அதனை ஏற்றிருந்தனர் மித்ரன் என்ற பழம் பெயரில் ஈரானியரிடமிருந்து பண்டைய இருக்கு வேத ஆரியர் கூட அதை மேற்கொண்டிருந்தனர் இதுமட்டுமன்று கிரேக்க புராண மரபின்படி தேவர்களின் அரசனை எதிர்த்துத் தன் உயிரையே கொடுத்து, மனித உலகுக்கு நெருப்பைக் கொண்டுவந்தவன் தேவர்களின் பகைவனாகிய புரோ மீதியஸ் என்ற அசுரளேயாவான்.

இந்திரன் தொல்காப்பிய மரபில் மருதநிலத் தலைவன் வேந்தன் என்ற பெயரில் முதலில் குறிக்கப்பட்டான். சங்க காலங்களில் இந்திரன் என்ற பெயருடனேயே மழைத்தெய்வமாகவும் தமிழர் தேசீயத் தெய்வமாகவும் அவன் இந்திரா விழாவுக்குரியவனானான். இன்று தமிழர் கொண்டாடும் பொங்கல் இந்தி இந்திர விழாவே இருக்கு வேதம் அவனைப் பாஞ்சாலர்களுக்குரிய தெய்வம் என்றே கூறுகிறது. பாஞ்சாலர்களின் வளத்துக்கும் வெற்றிக்கும் காரணமான அவனைத் தம் பக்கம் சேர்த்த பின்பே, அவர்களால் பாஞ்சாலத் திராவிடர்களை அடக்கி ஒடுக்க முடிந்தது. ஒருவேளை இந்திர வழிபாட்டுக்குரிய திராவிடப் புரோகிதராகிய பிராமணர்களையும் ஆரியர் இந்தக் காலத்திலேயே தம் புரோகிதர்களாக்கி, திராவிடப் புரோகிதர் பலரின் ஆதரவு பெற்றே பாஞ்சாலத் திராவிடர்களின் கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றியிருத்தல் கூடும்!

அக்கினி என்ற சொல் தீ என்ற பொருளில் பல ஆரிய மொழிகளில் இருப்பது போலத் தோற்றினால் தெய்வப் பெயர் என்ற முறையில் திராவிடப் பண்பாட்டுக்குரியது என்பதை மேலே பார்த்தோம் அச்சொல் கூட ஆரியச்சொல்தான் என்று முடிவு கட்டிவிட முடியாது ஏனென்றால் வடஐரோப்பிய ஆரிய இனத்தின் (ஜெர்மானிய) மொழிகள் எதனிலும் அச்சொல் கிடையாது. ஆரியர்கள் என்பது ஆரிய இனத்தின் பெயராகவே வழங்கினால் அதுகூட ஆரியச் சொல்லன்று என்பதையும் கண்டோம்.

வேதம் என்ற சொல்லும் இதுபோலவே ஆரியச் சொல்லாகத் தோற்றினாலும் ஈரான் ஆரியரிடையேயும் இந்திய ஆரியரிடையேயும் மட்டுமே சொல்லும் பொருளும் நிலவுகின்றன அறிவு' என்ற அச்சொல்லின் பொருள் அச்சொல்லின் ஆரியப் பொருளாகும் ஆனால் சொல் இந்தியச்சொல், திராவிடச்சொல், தமிழ்ச்சொல். ஒது என்றவினை ஒத்து என்ற பெயர் ஆகிய இருவடிவிலும் தமிழில் வழங்கும் சொல்லுடன் அது தொடர்புடையது. தமிழகத்தில் தேவாரம் முதலிய திருமறைகளைக் கோயில்களில் ஒதுபவர்கள் இன்றும் ஒதுவார் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

வேதம் இன நூல் பரம்பரையாகப் பக்தியுடன் பாடுதல் பொருளுடன் ஓதுஎன்ற வினைச் சொல் தமிழில் மட்டும்தான் உண்டு.

ஸ்பெயின் முதல், ஒருவேளை மெக்சிகோ, பிரிட்டன் நார்வே முதல், தமிழகம் இந்தியா ஊடாக, தென் கிழக்காசியா கடந்து பசிபிக் தீவுகள் வரை மூல திராவிட இனமோ அல்லது அவர்களது நாகரிகமோ பரவியிருந்த தொல் பழங்காலம் ஒன்று உண்டு. இன்றும் தமிழர் புதிது பரவிப் பிழைக்கப்போகும் நாடுகள் இவையேயாகும். உலகில் இன்றுள்ள திராவிட மொழிகள், பண்பாடுகள் மட்டுமல்ல ஆரியமில்லாத மொழிப் பண்பாடுகள் மட்டுமல்ல; பல ஆரிய மொழிகள் ஆரியமொழிப் பண்பாடுகள் கூட, அந்தத் தொல் பழங்கால மூல திராவிடப் பண்பாட்டின் சிந்துதல் சிதறுதல்களேயாகும் என்று கொள்ள இட முண்டு.

இன்றைய உலக சமயவாழ்விலே, நாகரிக பண்பாட்டு மரபுகளிலே, மொழிகளிலே ஆரிய' மொழிகள், சமயம், பண்பாடு என்று நீண்ட நாளாகக் கூறப்பட்டு வருபவற்றிலே கூட உண்மையான ஆரியப்பங்கு எவ்வளவு, உண்மையான திராவிடப்பங்கு எவ்வளவு; என்பதை உலக அறிஞர் மீட்டாய்வு (புனராலோசனை) செய்ய வேண்டும், நீண்டகாலமாக, நூற்றாண்டுக் கணக்காக, உலகின் மீதும் மனித சமுதாயத்தின் மீதும் ஆட்சி ஆதிக்கம் செலுத்திவரும் இனத்தவர் தம் பிடிக்கு ஒரு இனவரலாற்றுச் சான்று காட்டு நோக்கத்திடனேயே, சரியாகவோ, தவறாகவோ தம்இனம்என்று அவர்கள் கருதும் ஆரிய இனச் சார்பாக ஆராய்ச்சி துறையை இயக்கி வருகின்றனர்.இருக்குவேத நாகரிகத்திலும் கிரேக்க ரோம நாகரிகத்திலும் ஆரிய இனக்கூறுகள் இருக்கக் கூடும் என்று கருதுவது இயல்பே. ஆனால் இந்த ஆராய்ச்சி பற்றற்ற நடுநிலையுடன் செய்யப் படுமானால், ஆரியக்கூறு மிகுதி இருக்கும் என்றுமுடியும், கூறுவதற்கு இடமில்லையென்றே கூறலாம், ஆரியக்கூறு எவ்வளவு, எந்த எந்தக் காலத்துக்குரியது என்று ஆராயும் முயற்சியே அண்மைக்காலம் வரையில் எடுக்கப்பட இட மில்லாத வகையில் ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டே உலக அறிஞர் எல்லாரும் பொதுவாக ஆரியப் பெயர் சூட்டிக் கொண்டதெல்லாம் ஆரியமே' என்று தமக்குள் தாமே முடிவுகட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலை மாற உலகளாவத் தமிழாய்வுச் சங்கம் நிறுவி உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தும் அகமேடை' ஆராய்ச்சி அறிஞர்கள் இவற்றின் பக்கம் கண்ணைத் திருப்புவார்களா? அல்லது அறிந்தஅறிவின் ஆதிக்கப் பிற்போக்குத் தப்பெண்ணெய்க் கோட்டையாகிய செக்கையே சுற்றிச் சுற்றி நுணுக்க ஆய்வாராய்ச்சித் தடங்களில் வலம்வந்து கொண்டிருப்பார்களா?

சென்னைப் பல்கலைக் கழக அறிஞர்கள் சென்ற சில ஆண்டுகளாக முருகன் தமிழ்த் தெய் வமா? ஆரியத் தெய்வமா பாரசீகத் தெய்வமா? சிவன் தமிழ்த் தெய்வமா? என்பவை போன்ற சிறுபிள்ளை ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். உலகத் தமிழ் மாநாட்டு மேடையிலும் தமிழ் எழுத்துக்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் எப்போது தோன்றின என்ற நுட்ப நுணுக்க ஆராய்ச்சியில் பேரறிஞர் பொழுது போக்கினர்.

இந் நுண்ணாராய்ச்சிகள் தேவையே, ஆனால் அடிப்படைத் தவறுதல் தப்பெண்ணங்களை எவரும் தொடாமல் பார்த்துக்கொண்டு நுண்ணாராய்ச்சி மாய்மாலங்களால் ஆதிக்க வகுப்பினர் மக்கள் உலகின் கண்களை எவ்வளவு காலம் மறைத்து வைத்துவிட முடியும்?

புது நுண்ணாராய்ச்சிகளில் ஆராய்ச்சியுலகம் வளைய வளைய வந்தால் போதாது. ஏற்பட்ட அடிப்படைத் தவறுகள் திருத்தப்படாதபோது, மேற்பட்ட மெருகு மினுக்க வேலை மட்டும் எவ்வாறு பயன்பட முடியும்?
தனிப்பட்ட ஒரிருவர் எவ்வளவு முனைந்து ஆராய்ச்சி செய்தாலும், உலகளாவ, இந்திய மாநிலம் செறிய பரந்துள்ள தப்பெண்ணப் பாசிகளை எளிதில் அகற்ற முடியாது. உலகளாவிய ஒரு மக்கள் தேசிய இனம் ஆராய்ச்சித் துறையில் ஒன்றுபட்டு உழைத் தாலன்றிக், கட்டுப்பாடான ஆதிக்க ஆராய்ச்சிக் கோட்டையைத் துளைத்து மெய்யாராய்ச்சி ஓர் அங்குலம் கூட முன்னேற முடியாது

கருத்துகள் இல்லை: